Tuesday, October 13, 2015

வங்கித் துறை விற்பனைக்கு!


வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டதன் முக்கிய நோக்கமே, மக்களுக்குச் சேவை செய்யத்தான்

வங்கித் துறையை எப்படியாவது முழுவதுமாகத் தனியார் கைகளில் ஒப்படைத்துவிட வேண்டும் என்று அடுத்தடுத்து காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

கடந்த ஆகஸ்ட் 14 அன்று ‘இந்திர தனுஷ்’ என்ற மத்திய அரசின் கொள்கை அறிவிப்பின் அடிப்படையில், கனரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா ஆகிய இரு பெரிய வங்கிகளின் தலைமைப் பொறுப்புக்குத் தனியார் துறையிலிருந்து உயரதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, பேமெண்ட் வங்கிகள் என்ற பெயரில் 11 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கிகள் துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பந்தன் வங்கி, ஐடிஎஃப்சி வங்கி என்ற பெயரில் இரு புதிய தலைமுறை வங்கிகள் துவங்கப்பட்டுள்ளன. சிறிய நிதி வங்கிகள் என்ற பெயரில் 10 தனியார் வங்கிகள் களம் இறங்கியுள்ளன. முத்தாய்ப்பாக ஐடிபிஐ என்ற பொதுத் துறை வங்கியில் மத்திய அரசின் பங்கு 76%லிருந்து 49%ஆகக் குறைக்கப்பட்டு, தனியார்மயமாக்கப்படப்போகிறது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மற்ற அனைத்து பொதுத் துறை வங்கிகளிலும் மத்திய அரசின் பங்கு 52%ஆகக் குறைக்கப்படும் என்ற அறிவிப்பும் கூடவே வெளியாகியுள்ளது.

கிராம மக்களின் நிதிச் சேவையில் 40 ஆண்டுகளாகத் தலைசிறந்த பங்காற்றிவருகின்றன 56 கிராம வங்கிகள். 27 மாநிலங்களில் 639 மாவட்டங்களில் 19,000 கிளைகள் மூலமாக 80,000 அதிகாரிகளும், ஊழியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கிராமப்புற எளிய மக்களுக்கு சேவை அளிக்கின்றனர். 3 கோடி சாதாரண மக்களுக்கு 2 லட்சம் கோடிக் கடன் வழங்கியுள்ள இவ்வங்கிகளின் பங்குகளை 49% வரை தனியாருக்கு விற்க இவ்வாண்டு துவக்கத்தில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

தனியார் மயத்தை நோக்கி

நிதியும், நீதியும் மறுக்கப்பட்ட விவசாயப் பெருங்குடியினருக்கு அரும்பணி செய்துவரும் 93,000 பிரதம வேளாண் கூட்டுறவுச் சங்கங்களின் பணி முடக்கப்பட்டு, அவை மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் வியாபார முகவர்களாகச் செயல்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறது மத்திய அரசு நபார்டு வங்கி மூலமாக. ஆக, இவை அனைத்தும் தனியார்மயத்தை நோக்கி ஒட்டுமொத்த வங்கித் துறையையும் வேகமாகத் தள்ளிவிடும் முயற்சிகள்.

பாஜகவைப் பொறுத்தவரை அக்கட்சி எப்போதுமே பொதுத் துறைக்கு எதிராகத்தான் செயல்பட்டிருக்கிறது. பாஜகவின் முந்தைய அவதாரமான பாரதிய ஜனசங்கம் வங்கிகள் தேசிய மயத்தைக் கடுமையாக எதிர்த்தது. வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியின்போது 2000 டிசம்பரில் பொதுத் துறை வங்கிகளில் மத்திய அரசின் பங்குகளை 33%ஆகக் குறைக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால், வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒன்றுபட்ட போராட்ட எதிர்ப்பாலும் இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் எதிர்ப்பாலும் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

வரலாற்றின் இமாலயத் தவறு

பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க வேண்டும் என்று 2008-ல் அறிக்கை சமர்ப்பித்த ரகுராம் ராஜன்தான் இன்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர். “வங்கிகள் தேசிய மயம் என்பதே வரலாற்றின் இமாலயத் தவறு” என்று திருவாய் மலர்ந்தருளியுள்ள அர்விந்த் சுப்ரமணியன்தான் பிரதமர் மோடியின் முக்கியப் பொருளாதார ஆலோசகர். மத்திய அரசும், நிர்வாகத் துறையும் இணைந்து வங்கிகளை 1955க்கு முன்பிருந்தபடி முழுமையாகத் தனியார் கைகளில் சேர்க்க பகீரதப்பிரயத்தனத்தில் ஈடுபட்டுவருகின்றன. “1969-ல் பெரிய வணிக வங்கிகள் அரசுடைமை ஆக்கப்படுவதற்கு முன்னால் தனியார் வங்கிகளின் கட்டுப்பாட்டைக் கைகளில் வைத்திருந்த வியாபார நிறுவனங்கள், வங்கிகளின் மிகப் பெரும் அளவிலான கடனைப் பெரிய, வளர்ந்த வியாபார நிறுவனங்களுக்கே வழங்கிவந்தன” என்று ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது.

சூறையாடப்பட்ட சேமிப்பு

1947-ல் சுதந்திரம் அடைந்ததிலிருந்து 1969 வரை 557 தனியார் வங்கிகள் திவாலாகி, அவற்றில் போடப்பட்டிருந்த பொதுமக்களின் சேமிப்பு பெரும்பாலும் சூறையாடப்பட்டது. 1969-க்குப் பின்னரும் பேங்க் ஆஃப் தஞ்சாவூர், பேங்க் ஆஃப் தமிழ்நாடு, பேங்க் ஆஃப் கொச்சின், நெடுங்காடி பேங்க் உள்ளிட்ட 20 தனியார் வங்கிகள் திவாலாகின. ஒரு வித்தியாசம் - இவ்வங்கிகளெல்லாம் பொதுத் துறை வங்கிகளோடு இணைக்கப்பட்டதால் பொதுமக்களின் சேமிப்புக்குப் பங்கம் வரவில்லை. ஆனால், தனியார் வங்கிகளின் நஷ்டம் முழுவதையும் பொதுத் துறை வங்கிகளே ஏற்க நேரிட்டன. 1994-ல் துவங்கப்பட்ட புதிய தனியார் வங்கியான ‘குளோபல் டிரஸ்ட் பேங்க்’ பத்தே ஆண்டுகளில், 2004-ல் ரூ.1,100 கோடி நஷ்டத்துடன் திவாலாகியது. பொதுத் துறை வங்கியான ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ்தான் இதனைச் சுமக்க நேரிட்டது.

1960-களின் மத்தியில் விவசாயத் துறை நாட்டின் மொத்த உற்பத்திக்கு 44% வரை பங்களித்து வந்தபோது, அத்துறைக்குத் தனியார் வங்கிகள் வழங்கிய கடன் மொத்தக் கடனில் 0.2% மட்டுமே. 1969-க்கு பிறகுதான் பொதுத் துறை வங்கிகள் வழங்கும் மொத்தக் கடனில் 40% ஏழை, எளிய மக்களுக்கான முன்னுரிமைக் கடனாக இருக்க வேண்டும்; அதில் 18% கட்டாயமாக விவசாயத் துறைக்கு வழங்கப்பட வேண்டும் என்பதெல்லாம் நிகழ்ந்தன. அதுதான் நம் நாடு உணவுத் தன்னிறைவை எட்டுவதற்குக் கணிசமாகப் பங்காற்றியது.

மக்களுக்கான வங்கி

“தேசிய முன்னுரிமைகளான விவசாயம், சிறுதொழில், ஏற்றுமதி ஆகியவற்றின் அபரிமிதமான வளர்ச்சி, வேலைவாய்ப்பின் பெருக்கம், புதிய தொழில்முனைவோருக்கு ஊக்கம், பின்தங்கிய பிரதேசத்தின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு வங்கித் துறை சேவை புரிய வேண்டும்” என்பதே வங்கித் துறை தேசியமயமாக்கப்பட்ட சட்டத்தின் முன்னுரையில் அதன் நோக்கமாகச் சொல்லப்பட்டது. “வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டதன் முக்கிய நோக்கம் - பெரும் பணக்காரர்களுக்கான வங்கிச் சேவை என்பதிலிருந்து மக்களுக்கான வங்கிச் சேவையாக மாற வேண்டும் என்பதே. அத்துடன் கிராம, சிறு நகர்ப்புறங்களில் ஏராளமான கிளைகள் திறந்து ஏழை மக்களுக்கான கடன் சேவையை அதிகரிப்பதுதான்” என்கிறது ரிசர்வ் வங்கி அறிக்கை. மேலும், 2010 ரிசர்வ் வங்கி அறிக்கை “1993 முதலான 17 ஆண்டு காலம் தனியார் வங்கிகள் செயல்பட்டதன் அனுபவத்தைப் பரிசீலித்தால், ஒன்று அவை திவாலாகிவிட்டன அல்லது மற்ற வங்கிகளோடு இணைந்துவிட்டன அல்லது வளர்ச்சி குன்றிவிட்டன” என்று உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும் அந்த அறிக்கை “தனியார் நிறுவனங்களை வங்கிகள் துவங்க அனுமதித்தால் அவை சுயநலத்தோடு பாரபட்சமாகச் செயல்படும். எனவே, உண்மையான கடன் தேவை உள்ள பகுதிகளுக்குக் கடன் கிடைக்காது; அவை வாடிக்கையாளர் தேவைகளைப் புறக்கணித்து தங்களது தேவைக்கு மட்டுமே செயல்படுமாதலால் முரண்பாடு உருவாகும். எனவே, தனியார் முதலாளிகளை வங்கிகள் துவங்குவதைத் தடுப்பதன் மூலமாக இத்தகைய முரண்பாடுகளைத் தவிர்ப்பதோடு, 1969க்கு முன்பு வரை வங்கிகள் சில தனிநபர்கள் கையில் ஏகபோகமாகக் குவிந்திருந்த நிலைமையையும் தவிர்க்கலாம்” என்கிறது.

2008 செப்டம்பர் 15-ல் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பிறகு அந்நாட்டில் 450-க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகள் திவாலாகின. உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கிய அந்நெருக்கடியின் தாக்கம் இந்தியாவில் மட்டுப்பட்டிருந்ததற்குக் காரணம் 75%க்கும் மேற்பட்ட வங்கித் துறை வியாபாரம் பொதுத் துறை வங்கிகளின் கைகளில் இருந்ததால்தான் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் பேருண்மை.

கந்துவட்டிக்குக் கடன்

நம் நாட்டில் புதிய பொருளாதாரக் கொள்கை அமலாக்கத்துக்குப் பிறகு, மொத்த வங்கிக் கிளைகளில் கிராமப்புற வங்கிக் கிளைகள் 1994-ல் 54%-ல் இருந்து 2014-ல் 33%ஆகக் குறைந்துள்ளது. இன்றளவில் 73% விவசாயிகளுக்கு வங்கிக்கடன் கிடைப்பதில்லை. 43% கிராமப்புறக் கடன் கந்துவட்டிக்காரர்களின் பிடியில்தான் உள்ளது. 5.77 கோடி சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் 96% நிறுவனங்களுக்கு வங்கிக்கடன் மறுக்கப்பட்டுவருகிறது. மறுபுறம் ரூ. 1 கோடியும் அதற்கு மேலும் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாதவர்களின் பங்கு, மொத்த வாராக் கடனான சுமார் 3 லட்சம் கோடி ரூபாயில் 73% ஆகும்.

ஒரு நாட்டின் பொருளாதார திசை வழியைத் தீர்மானிக்கும் வண்டிக்கான ஸ்டீயரிங் போன்ற நிதித்துறை அரசு கையில் இல்லாமல், தனியார் கைகளுக்குப் போனால் நிலைமை என்னாகும்?


Courtesy-Tamil Hindu

No comments:

Post a Comment