இலங்கையில் உள்நாட்டுப் போர் என்ற போர்வையில் தமிழர்களை சிறுபான்மை சமுதாயமாக சுருக்கிவிட்டது இலங்கை அரசு என்று சர்வதேச மூத்த குடிமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இந்த பிரச்னை இதுவரை கண்டு கொள்ளப்படவேயில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
சர்வதேச மூத்த குடிமக்கள் குழுவில் தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான், நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க பாதிரியார் டெஸ்மான்ட் டுட்டூ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு 2007-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
இலங்கையில் நடந்துள்ள இனப் படுகொலையை சர்வதேச சமூகம் குறிப்பாக சீனா, இந்தியா ஆகிய நாடுகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இலங்கையின் இந்த செயல்பாடு குறித்து சர்வதேச சமூகம் எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் உள்ளது. இதற்காகவே இலங்கை அரசு தனக்கு சாதகமான நாடுகள் மூலம் கருத்து தெரிவிக்காமல் தடுத்துவிட்டது என்றும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
மனித உரிமை மீறல் விஷயத்தில் சர்வதேச சமூகம் தனது அணுகுமுறையில் பாரபட்சமாக இருக்கக் கூடாது. இலங்கை அரசின் செயல்பாடு சர்வதேச அளவில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகும்.
கடந்த ஆண்டு இலங்கை அரசு, தனி நாடு கோரி போராடி வந்த விடுதலைப் புலிகள் அமைப்பை முற்றிலுமாக அழித்தது. அப்போது போர் காலத்தில் கடைப்பிடிக்கப்படும் நெருக்கடி நிலை விதிகளை ஓராண்டுக்குப் பிறகும் இலங்கை அரசு பின்பற்றுகிறது. 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழர்களை சிறுபான்மை சமூகமாக ஒடுக்கும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்பதில் இலங்கை அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். இப்போதும் அங்கு மனித உரிமை மீறல், பத்திரிகையாளர்களுக்கு தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் மிகவும் அபாயகரமானவை என்று டுட்டூ குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச குழு ஓரளவு தகவல்களை வெளியிட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் அமைத்துள்ள குழுவுக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மூத்த குடிமக்கள் குழு வலியுறுத்தியுள்ளது. அதேபோல உள்ளூர் மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இதற்காக எவ்வித கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
காலனி ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய மூன்றாம் உலக நாடுகளில் இலங்கையும் ஒன்று. இங்கு மனித உரிமை மீறல் நடைபெறுவதை ஏற்க இயலாது.
இதை இலங்கையின் நட்பு நாடுகள் உணர்ந்து அங்கு அமைதி நிலவ முயற்சி எடுப்பதோடு மீண்டும் ஒரு உள்நாட்டு போர் ஏற்பட வழிவகுத்துவிடாமல் தடுக்க வேண்டும் என்று அல்ஜீரியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்தார் பிராமி கூறினார்.
No comments:
Post a Comment