சுமார் 1,500 கிராம நிர்வாக அலுவலர்களைத் (வி.ஏ.ஓ.) தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பு ஜூலை 21-ல் வெளியாகிறது. ஜனவரியில் எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
÷இரண்டு ஆண்டுகளுக்குப் பின், இப்போது மீண்டும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. எழுத்துத் தேர்வு ஜனவரி 20-ம் தேதிக்குப் பிறகு ஏதாவது ஒரு நாளில் நடத்தப்படக் கூடும் எனத் தெரிகிறது. இது தொடர்பான விவரங்கள் அனைத்தும் ஜூலை 21-ம் தேதி வெளியிடப்பட உள்ள தேர்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்படும்.
தமிழகம் முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ. காலியிடங்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு நிரப்பப்பட்டன. இதற்கான தேர்வில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். 10-ம் வகுப்பு மட்டுமே தேர்வுக்கான தகுதி என்பதால் மாநிலம் முழுவதும் இந்தத் தேர்வில் பங்கு பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது.
நவம்பரில் குரூப் 2 தேர்வு அறிவிப்பு: தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட குரூப் 2 பணியிடங்களை நிரப்பும் எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பு வரும் நவம்பரில் வெளியிடப்பட உள்ளது. தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 2 நிலையிலான காலியிடங்கள் அதிகம் உள்ளன.
கடந்த ஏப்ரலில் நடைபெற்ற குரூப் 2 எழுத்துத் தேர்வின் முடிவுகள் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகுமென்று அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment