Wednesday, July 28, 2010

நன்றாகத் தேர்வு எழுதுவது எப்படி?

மாணவர்களுக்குத் தேர்வுபயம் போனால்தான் அவர்கள் ஓரளவு நன்றாகத் தேர்வு எழுத முடியும். தேர்வை எப்படி எழுதினால் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்பதற்கான வழிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன.

தேர்வுக்கு முதல்நாள் இரவு புதியதாக எதையும் படிப்பதோ, இரவு நீண்ட நேரம் படிப்பதோ கூடாது.

எடுத்த குறிப்புகளை அன்று காலையில் மீண்டும் நினைவுப்படுத்திப் பார்ப்பதுதான் சரியான முறை.

இரவில் நன்கு தூங்கி எழுந்து தேர்வுக்கு அமைதியான மனநிலையில் செல்வதுதான் அதிக மதிப்பெண் பெற உதவும்.

தேர்வுக்கு சிறிது நேரத்துக்கு முன் உங்கள் நண்பர்கள், அதைப் படித்தாயா? இதைப் படித்தாயா? என்று உங்கள் பயத்தை அதிகப்படுத்த முயற்சிக்கலாம். அதையெல்லாம் கண்டு கொள்ளாதீர்கள். அத்தகைய நண்பர்கள் பக்கமே போகாதீர்கள்.

தேர்வு அறையில் வினாத்தாள் வாங்குவதற்கு முன் 3 நிமிஷங்கள் "ரிலாக்ஸ்' செய்யுங்கள். இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக மூச்சை இழுத்துச் சிறிது சிறிதாக வெளியே விடுங்கள். மனத்தை உங்கள் மகிழ்ச்சியான அனுபவத்துக்கு இட்டுச் செல்லுங்கள்.

"என்னால் மிக நன்றாகத் தேர்வு எழுத முடியும். முழு நம்பிக்கை இருக்கிறது' என்று குறைந்தபட்சம் 5 முறையாவது உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள். இதற்காக 2 நிமிஷங்கள் செலவழிக்கலாம். கேள்வித்தாளை வாங்கிய உடன் 2 அல்லது 3 நிமிஷங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு நிமிஷங்கள் ஒதுக்குவது எனத் திட்டமிடுங்கள்.

குறைவாக எழுத வேண்டிய கேள்விகளுக்கு அதிகமாக எழுதியும் அதிகமாக எழுத வேண்டியவற்றுக்கு நேரம் இன்மையால் குறைவாகவும் எழுத வேண்டாம்.

அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிப்பது முக்கியம்.

முழுவதும் எழுதிய பிறகு குறைந்தது 5 நிமிடங்களாவது எழுதியதைப் படித்துப் பார்க்க நேரம் வைத்துக்கொள்ள வேண்டும்.

விடைகளைப் பக்கம் பக்கமாக எழுதாமல் பாயிண்ட் பாயிண்ட்டாக சுருக்கமாக எழுத வேண்டும்.

எத்தனை வார்த்தைகளில் பதில் என்பதில் கட்டுப்பாடு அவசியம்.

கையெழுத்தைப் பிறர் புரியும்படி எழுத வேண்டும்.

கேள்வி எண், அதன் பகுதி எண் ஆகியவற்றைச் சரியாக எழுதுங்கள்.

ஓரிரு வார்த்தைகளில் பதில் கூற வேண்டியது, ஒரு செயலைச் சரியான பதிலாகத் தேர்ந்தெடுப்பது ஆகியவற்றில் வேகம் அவசியம். நன்கு தெரிந்த விடையை டக் டக் என்று தேர்வு செய்து எழுதுங்கள். தெளிவில்லாததைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு தேர்வு முடிந்ததும் உங்கள் விடைத்தாளை ஆசிரியரிடம் காட்டி ஆலோசனை பெறுங்கள். விடைகளில் அவசியமில்லாத வார்த்தைகள் உள்ளனவா? எங்கு கவனக்குறைவால் தவறு ஏற்பட்டுள்ளது? ஒவ்வொரு பாயிண்ட்டுக்கும் அடிக்கோடு இட்டுள்ளீர்களா? குறைந்த நேரத்தில் எவ்வளவு சுருக்கமாக விடையளிக்கலாம்? என்பது குறித்து ஆசிரியரிடம் அறிவுரை கேளுங்கள்.

கேள்விகளுக்கு விடைகளை எழுதிப்பார்ப்பது அதிக மதிப்பெண் பெற உதவும். எந்த ஒரு காரியத்தையும் செய்து முடித்த பிறகு அதில் என்ன சிறப்பு, குறை என்ன என்று ஆராய்வது அக்காரியத்தை மீண்டும் சிறப்பாகச் செய்ய உதவும். இது ஓர் உளவியல் உத்தி.

No comments:

Post a Comment